
புதுடெல்லி: ‘
நாட்டில் மக்களிடையே வருமான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, தற்போது இந்த ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பிரபல பொருளாதார வல்லுனர்கள் தாமஸ் பிக்கட்டி, லுாகாஸ் சான்செல் ஆகியோர், '1922-2014 இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு' என்ற, ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
அதன் விபரம்:
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கடந்த 1922ல் வருமான வரி செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின், அப்போதைய மொத்த வருமானத்தில் 21 சதவீத வருவாயை,1 சதவீதத்தினர் ஈட்டினர்.
1980ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வருமானத்தில், உயர் வருவாய் பிரிவினர் 6 சதவீதமாக இருந்தனர். இதனால், வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்தது.
அதன் பின்னர், தாராளமய பொருளாதார கொள்கை, சந்தை கொள்கைகளில் தலை கீழ் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது. அதிக வருவாய் பிரிவினர், நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டினர். இந்த அளவு, அதிகரித்தபடியே வந்தது. தற்போது, இந்தியாவின் மொத்த வருமானத்தில் 22 சதவீதத்தை ஒரு சதவீத உயர் வருவாய் பிரிவினர் ஈட்டுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட, தற்போது இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. பல நாடுகளில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வை விட, இந்தியாவில் இந்த ஏறறத்தாழ்வு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
Updated Time : 07-09-2017 09:51 AM Print


