
சென்னை, ஜூன். 25 :
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் பொருட்களின் விலை உயராது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் ஜி.எஸ்.டி குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வணிகர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறோம். இதுதொடர்பாக, வணிகர்கள் மற்றும் வியாபாரிகளின் கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். இதுதவிர, இ-மெயில் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அனுப்பப்பட்டு வருகிறது.
மாவட்டத் தலைநகரங்களில் ஜி.எஸ்.டி விளக்கம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிராண்ட் பெயர் இல்லாத பொருட்கள் மற்றும் 20 லட்சத்துக்கு குறைவாக வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு வரி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


