
பீஜிங், ஏப். 19 :
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலாய் லாமாவின் இந்திய வருகைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை சீனா மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானை போல, சீனாவுடனும் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னை இருந்து வருகறது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில், உள்ள பகுதிகளை, கடந்த 1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த போரின் போது சீனா கைப்பற்றியது.
அதன்படி, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா. இந்த எல்லைப் பிரச்னை தொடர்பாக, இதுவரை 19 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திபெத்திய மத தலைவர் தலாய் லாமா சமீபத்தில் இந்தியா வந்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமா இந்தியா வந்தார்.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த சீனா, அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள வோஜியான்லிங், மிலா ரி, சோய்டெங்கார்போ ரி, மெயின்குகா, புமோ லா, நம்கபுப் ரி ஆகிய இடங்களின் பெயர்களை மாற்றி அறிவித்துள்ளது. சீனாவின் இந்த செயல்பாட்டால் இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Updated Time : 19-04-2017 14:58 PM Print


