
தஞ்சாவூர், பிப். 05 :
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் 'பண மதிப்பு நீக்கம் - மக்கள் படும் வேதனை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது: பண மதிப்பு நீக்கத்தால் 132 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தனி நபரின் சர்வாதிகார போக்கு.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், கள்ள நோட்டை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாதிகளுக்குக் கள்ள நோட்டுகள் கரன்சிகளாக போய் சேருவதை ஒழிப்பதற்காகவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் கருப்புப் பணமும் ஒழிக்கப்படவில்லை. ஊழலும் ஒழியவில்லை. பண மதிப்பு நீக்கத்தால் பல கோடி மக்கள் துன்பப்பட்டனர். அனைத்து சந்தைகளும், தொழில் கூடங்களும் மூடப்பட்டன.
400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க 15.44 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வது என்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போன்றது. இதன் விளைவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த பட்ஜெட் உப்பு சப்பு இல்லாத பட்ஜெட்டாக உள்ளது.
வளர்ந்த நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியாவில் தலா 80 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 60 சதவீதமும், பிரான்சில் 56 சதவீதமும், கனடாவில் 54 சதவீதமும் பண பரிவர்த்தனையே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பணமே இல்லாமல் எப்படி பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும்?
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.Updated Time : 05-02-2017 13:34 PM Print


