
லண்டன்:
பிரிட்டனில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களது பெண் பணியாளர்களை ஹை ஹீல்ஸ் அணிந்து பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த நிக்கோலா என்ற பெண், பணிநேரத்தில் ஹை ஹீல்ஸ் அணியாத காரணத்தில், கடந்த ஆண்டு பணியை இழந்தார். தனியார் நிறுவனங்களின் இந்த அடாவடிக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் அவர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
இதன்மூலம், இந்த விவகாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து, இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு எம்பிக்கள் சிலர் அடங்கிய குழுவை நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டது.
இதுதொடர்பான ஆய்வறிக்கை, தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களது பெண் ஊழியர்களை ஹை ஹீல்ஸ் அணிந்து பணியாற்றுமாறு வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
பல மணி நேரம் ஹை ஹீல்ஸ் அணிந்து பணியாற்றுவதால் ஏராளமான பெண்கள் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பெண்கள்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆளாவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதுபோன்ற விதிகளை விதிக்கும் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு எம்பிக்கள் குழுவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நிக்கோலா கூறுகையில், "பணி நேரத்தில் பெண் ஊழியர்கள் முழு மேக்அப்பில் இருக்க வேண்டும் என்றும், ஹை ஹீல்ஸ் அணிந்திருக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. அதோடு, கவர்ச்சியான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன. ஆனால், இனிமேலாவது தயவு செய்து பெண் ஊழியர்களின் திறமையை மட்டும் பாருங்கள், உடலை பார்க்காதீர்கள்" என்றார்.
Updated Time : 27-01-2017 22:00 PM Print


