
நியூயார்க், ஜூன் 11 :
குத்துச்சண்டையில் முடிசூடா மன்னனாக திகழந்த முகமது அலியின் இறுதிச் சடங்கில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி (74) உடல்நலக் குறைவு காரணமாக, கடந்தவாரம் காலமானார்.
61 குத்துச்சண்டை களங்களை கண்ட முகமது அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களையும், 56 வெற்றிகளை யும் பெற்று தனிப்பெரும் சாதனை படைத்தவர். ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை.
சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முகமது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில்,உடல் நலக்குறைவால் கடந்த 4ஆம் தேதி காலமானார். அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில், லட்சக்கணக்கானோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் நடைபெற்ற முகமது அலியின் இறுதிச் சடங்கில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
Updated Time : 11-06-2016 11:37 AM Print


