
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்றும், நேரடியாக கடைகளில் சிடிக்கள் விற்பனையாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
'மெட்ராஸ்' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் இசை வெளியீட்டில் 'கபாலி' திரைப்படமும் ஒன்று. ஆனால் தற்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் விடுமுறையை கழித்து வருவதால், இசை வெளியீடு நடக்கும்போது அவர் இந்தியாவில் இருக்க மாட்டார். எனவே விழாவாக நடத்தாமல் நேரடியாக இசையை வெளியிட்டுவிடலாம் என படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், ஜூலை 1-ஆம் தேதி கபாலி திரைப்படத்தின் வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதுவும் தாமதமாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Updated Time : 07-06-2016 15:04 PM Print


